செய்திகள்

பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும் - சீதாராம் யெச்சூரி

Published On 2018-06-15 06:00 GMT   |   Update On 2018-06-15 06:11 GMT
இந்தியா மேம்படவும், மக்கள் வளம் பெறவும் மத்தியில் பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். #SitaramYechury #BJP

திருச்சி:

தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் ‘போராடுவோம் தமிழகமே’ என்ற தலைப்பில் பிரசார பயணம் மேற்கொண்டனர்.

இந்த பயணம் திருச்சியில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து இரவு திருச்சி தென்னூர் உழவர்சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா வரவேற்று பேசினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டுக்கு தேவை தலைவர்கள் அல்ல, நல்ல கொள்கைதான். அடுத்து வருகிற தேர்தலில் மோடி வருவாரா? அல்லது எந்த தலைவர் வருவார் என யோசிக்காமல் எந்த கொள்கையை அரியணை ஏற்ற வேண்டும் என்பதைத்தான் மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி முறையை அமல்படுத்தியதால் சிறு, குறு தொழில்கள் பாழ்பட்டு விட்டது. கோடிக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு விட்டது. இதை மாற்ற மத்திய அரசை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு, மாற்றுக்கொள்கையுடையவர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

தமிழகத்தில் 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லுமா? செல்லாதா? என்பதில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இறுதி தீர்ப்பு அடிப்படையில் தான் தமிழகத்தில் உள்ள ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என சொல்ல முடியும். தமிழக அரசை ‘ரிமோட்’ மூலம் மோடி இயக்குகிறார்.

 


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொன்றிருக்கிறார்கள். காவலர்கள் கையாண்ட துப்பாக்கி சைலன்சர் வகை துப்பாக்கி ஆகும். அதாவது சுட்டால் சத்தம் வராது. போராட்ட பதற்றத்தில் இருந்து கூட்டத்தை கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. சாதாரண மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பது, உயர்மட்ட உத்தரவு இல்லாமல் நடந்திருக்காது.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னால் ஒரு எச்சரிக்கைகூட விடப்படவில்லை. ஒரு வேளை இதில் மத்திய ஆட்சியாளருக்கு தொடர்பு இருக்குமேயானால், உச்சநீதி மன்ற நீதிபதிகள் மூலம் ஆழமாக விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மையை கண்டறிய முடியும்.

வங்கிகளின் வாராக்கடன் தொகையான ரூ.11.5 லட்சம் கோடியானது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கியது தான். அந்த தொகையை வட்டியுடன் திரும்ப பெற்றாலே நாட்டில் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கமுடியும். இந்தியாவில் வலுவான போராட்டம் மூலமாக தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

இந்தியா மேம்படவும், மக்கள் வளம்பெறவும் பாரதிய ஜனதா அரசும், மாநில பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும். சாதீய கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்களை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திகழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து வருகிற ஜூலை 2-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். மறுநாள் ஜூலை 3-ந்தேதி சேலத்தில் பெண்கள் சிறப்பு மாநாடு நடத்தப்படும் என்றார்.

கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி ஆகியோரும் பேசினர். கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #SitaramYechury #BJP

Tags:    

Similar News