செய்திகள்

ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தார்களா?- அதிகாரியின் முரண்பட்ட சாட்சியத்தால் குழப்பம்

Published On 2018-06-13 07:00 GMT   |   Update On 2018-06-13 07:00 GMT
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அவரை அமைச்சர்கள் பார்த்தார்களா? என்பது தொடர்பாக அதிகாரி அளித்த முரண்பட்ட சாட்சியம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. #Jayalalithaa
சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் பற்றி நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

அரசு மற்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்.

இவர்களில் சிலர் தங்கள் சாட்சியங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் என்பவர் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி சாட்சியம் அளித்த போது, ஜெயலலிதாவை அப்பல்லோ ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் இருந்து வீல்சேரில் கீழே கொண்டு வந்ததை அமைச்சர்கள் பார்த்தார்கள் என்றார்.


அப்போது நீதிபதி அவரிடம் அமைச்சர்கள் ஜெயலலிதாவை பார்த்தார்களா என்று திரும்ப கேட்ட போது, ‘‘ஆம் அமைச்சர்கள் பார்த்தார்கள். அவர்கள் ஜெயலலிதாவை கண் கொண்டு பார்த்ததை நான் கவனித்தேன்’’ என்றார்.

பின்னர் மே 26-ந்தேதி சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் அவரை குறுக்கு விசாரணை செய்தார். அப்போதும் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தார்கள் என்பதை வீரபெருமாள் உறுதிபடுத்தினார்.

ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் வீரபெருமாள் தனது நிலைப்பாட்டில் இருந்து திடீர் மாற்றிக்கொண்டார். ஜெயலலிதாவை அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்கள் என்று தான் சொன்னேன். ஆஸ்பத்திரியில் சந்தித்ததாக சொல்லவில்லை என்றார். அவரது முரண்பட்ட சாட்சியமும் கமி‌ஷனில் பதிவு செய்யப்பட்டது.

டாக்டர் பாலாஜி கடந்த பிப்ரவரி 14-ந்தேதி அளித்த சாட்சியத்தில் தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்ததாக தெரிவித்து இருந்தார்.

அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த தகவலை சுகாதாரத்துறை செயலாளரிடம் போனில் தெரிவித்ததாக முதலில் கூறினார். பின்னர் அவர் சுகாதாரத்துறை அமைச்சரை தனியாக சந்தித்து தகவல் தெரிவித்ததாக மாற்றிக் கூறினார். #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission 
Tags:    

Similar News