சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தைக் கூட பேசியது இல்லை- பிரதமர் மோடி
- நாடு முழுவதும் நாங்கள் ஒரே மாதிரியான இலக்குடன்தான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு உரிய பலன் கிடைக்கும்.
- தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது போல ஒரு மாயை ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக பேசுவதாகவும், செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. உண்மையில் நான் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பேசியது இல்லை.
அதுபோல சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் நடந்து கொண்டது இல்லை. நாட்டு மக்களில் யாரையும் நான் சிறப்பு மக்கள் என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை என்றுதான் சொன்னேன். அதை இப்படி திரித்து சொல்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி இந்த தடவை நான் சொல்லாததை எல்லாம் பிரசாரத்தில் சொல்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மீறி வருகிறது.
காங்கிரஸ் கட்சியினர் சிறுபான்மை இன மக்களை தூண்டும் வகையில் பிரசாரங்களில் பேசுகிறார்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மை இன மக்களை காங்கிரஸ் கட்சியினர் இப்படி பயன்படுத்துகிறார்கள்.
இதை நான் குறிப்பிட்டு சொன்னவுடன் அவர்கள் நான் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக செயல்படுவதாக வதந்தி பரப்புகிறார்கள். மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கரும், நேருவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இன்று அதில் இருந்து விலகி செல்கிறார்கள். அதை சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகும். அதைத்தான் நான் செய்து வருகிறேன்.
தேர்தல் பிரசார கூட்டங்களில் நான் எப்போதுமே சிறுபான்மை இன மக்கள் பற்றி பேசுவது கிடையாது. ஆனால் காங்கிரசார் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் சிறுபான்மை இன மக்களை குறிப்பிட்டு பேசுவது தேர்தல் சமயத்தில் அவர்களை திசை திருப்புவது போல் உள்ளது.
நாங்கள் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவு மக்களும் எங்களுடன் சுமூகமாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அனைவரும் சமம் என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும்.
இந்த விசயத்தில் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சிக்கு சிறுபான்மை இன மக்கள் பலியாகி விடக்கூடாது.
நாடு முழுவதும் நாங்கள் ஒரே மாதிரியான இலக்குடன்தான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு உரிய பலன் கிடைக்கும். தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது போல ஒரு மாயை ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவை பாருங்கள். தென் மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றியது பா.ஜ.க. மட்டுமே. மீண்டும் சொல்கிறேன். இந்த தடவையும் தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெறும்.
தென் மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா திகழும். தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம் கணிசமான அளவுக்கு உயரப்போவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
காங்கிரஸ் கட்சி மத ரீதியாக இட ஒதுக்கீடு செய்ய நினைக்கிறது. அதை நடக்க விடமாட்டேன். அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவேன். நாடு முழுவதும் இதற்கு மக்களிடம் ஆதரவு உள்ளது.
நாடு முழுவதும் மக்கள் ஆதரவு இருப்பதால் இந்த முறை அனைத்துப் பகுதிகளிலும் வரலாற்று சாதனை படைக்கும் வகையில் வெற்றிகளை பெறுவோம். குறிப்பாக தெற்கிலும், கிழக்கிலும் பாரதிய ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்.
நாங்கள் நிர்ணயித்துள்ள 400 இடங்கள் லட்சியத்தை மிக எளிதாக கடப்போம். உண்மையில் பாரதிய ஜனதா கட்சிதான் தேசிய அளவில் உணர்வுப்பூர்வமான கட்சி. நாங்கள் எந்த மாநிலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுத்தாலும் அது தேசிய நலனை அடிப்படையாக கொண்டு தான் அமையும்.
ஆனால் பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் வேறு விதமாக பேசி திசை திருப்புகின்றன. நாட்டின் நலனை சீரழிக்கும் வகையில் உள்ளன.
பாரதிய ஜனதாவை பிராமணர்கள் கட்சி என்று சொன்னார்கள். ஆனால் பாரதிய ஜனதாவில் தலித், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.