செய்திகள்

ஒடசல்பட்டி அரசு பள்ளியில் ரூ.1.64 கோடியில் வகுப்பறைகள் கட்டும் பணி

Published On 2018-06-12 17:28 GMT   |   Update On 2018-06-12 17:28 GMT
ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமசாமி, அரூர் உதவி கலெக்டர் டெய்சி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு கல்வித்துறை மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகம், சீருடைகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் வசதிக்காக 8 புதிய வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிவறைகள் புதிதாக கட்டப்படுகின்றன. இந்த பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் வெற்றிவேல், பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் தியாகராஜன், இளநிலை பொறியாளர் சரோஜாதேவி, கூட்டுறவுசங்கத்தலைவர்கள் மதிவாணன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News