செய்திகள்

சம்பள உயர்வுக்கு மனம் இருக்கிறது, ஆனால் பணம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2018-06-12 09:11 GMT   |   Update On 2018-06-12 09:11 GMT
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சம்பள உயர்வுக்கு மனம் இருக்கிறது, ஆனால் பணம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
திருவொற்றியூர்:

எண்ணூர், காசிவிஸ்வநாதர் கோவில் குப்பம் விரிவாக்கம் பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் 67 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. வீடுகளை இழந்த குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை இன்று காலை அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது தீவிபத்து ஏற்பட்ட பகுதியை அவர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கே.வி.குப்பத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய இன்று தலைமை செயலகத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு கூட்டம் நடைபெற உள்ளது.

ஏற்கனவே பசுமை வீடு கட்டுவதற்கான திட்டம் உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இலை தள்ளாடி கொண்டு இருக்கிறது என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். கற்பனை உலகத்தில் இருப்பவர்கள் தான் இதுபோன்ற கருத்துக்களை கூறுவார்கள். 27 வருடத்திற்கு மேலாக அரியணையில் இருக்கும் கட்சி அ.தி.மு.க.தான்.

தாமரைக்கோ, மக்கள் நீதி மய்யத்திற்கோ புதியதாக முளைத்திருக்கும் கட்சிகளுக்கோ தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இடம் இல்லை.

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஏற்கனவே ரூ.14 ஆயிரம் கோடி அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வாக வழங்கப்பட்டு உள்ளது. அரசின் நிதி நிலைமையை பொறுத்துதான் சரி செய்ய முடியும். சம்பள உயர்வுக்கு மனம் இருக்கிறது, ஆனால் பணம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News