செய்திகள்

மதுரையில் வங்கி அதிகாரி-நர்சு வீடுகளில் நகை கொள்ளை

Published On 2018-04-25 11:15 GMT   |   Update On 2018-04-25 11:15 GMT
மதுரையில் 2 வீடுகளுக்குள் புகுந்து 27 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

மதுரை:

மதுரை ஞானஒளிவுபுரம் மெய்யப்பன் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (வயது 68). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர் குடும்பத்துடன் நெல்லைக்கு சென்றார்.

வீடு பூட்டப்பட்டு கிடந்ததை அறிந்த மர்ம மனிதர்கள் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து முன் பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் பீரோவில் இருந்த 22 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து கரிமேடு போலீசில் மாதவன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மதுரை எச்.எம்.எஸ். காலனி இருதயம் நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி ஜீவரேகா (58), ஓய்வு பெற்ற செவிலியர்.

இவரும், குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இதனை பயன்படுத்தி யாரோ மர்ம மனிதர்கள் வென்டிலேட்டர் வழியாக வீட்டுக்குள் புகுந்தனர்.

அவர்கள் அங்கிருந்த 5 பவுன் நகைகளை திருடிவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து எஸ்.எஸ். காலனி போலீசில் ஜீவரேகா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் குழந்தைகளுடன் விடுமுறைையை கொண்டாட உறவினர் வீடு மற்றும் சுற்றுலாத்தலங்களுக்கு செல்கின்றனர். இதனை பயன்படுத்தி பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் மதுரையில் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்துப்பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News