செய்திகள்

ஜெயலலிதா ரத்த மாதிரி- அப்போலோ மருத்துவமனை நாளை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

Published On 2018-04-25 08:50 GMT   |   Update On 2018-04-25 08:50 GMT
ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஜெயலலிதாவின் ரத்த மாதிரி குறித்து அப்போலோ நிர்வாகம் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. #AmruthaCase #JayaBloodSamples #Apollo
சென்னை:

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அவர் தன் மனுவில் கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரி மற்றும் உயிரியல் மாதிரிகள் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியது. இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. ஆனால் அப்போலோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்போலா மருத்துவமனை தரப்பில், ஜெயலலிதாவின்  ரத்த மாதிரி குறித்து பதில் அளிக்க மேலும் அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என அம்ருதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.



இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. ஜெயலலிதாவின் ரத்த மாதிரி குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அம்ருதா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அ.தி.மு.க. இளைஞரணி தரப்பில் இன்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக அம்ருதா வழக்கறிஞர் தெரிவித்தார்.#AmruthaCase #JayaBloodSamples #Apollo
Tags:    

Similar News