செய்திகள்

தளி அருகே யானை தாக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகர் பலி

Published On 2018-04-23 17:05 GMT   |   Update On 2018-04-23 17:05 GMT
தளி அருகே யானை தாக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் பலியானார். கொலை எனக்கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள கல்கேரி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). கூலித்தொழிலாளி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (46) என்பவரும் சம்பவத்தன்று ஆடுகள் வாங்க கொல்லப்பள்ளி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை முருகேசன் ஓட்டி சென்றார். இந்த நிலையில் ஜவளகிரி அருகே மாரியம்மன் கோவில் பக்கமாக வந்த போது சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று நின்றது. இதை பார்த்த முருகேசன் மோட்டார்சைக்கிளை திருப்ப முயன்றார். அந்த நேரம் சுரேஷ் கீழே இறங்கி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டார். முருகேசன் மோட்டார்சைக்கிளில் தப்பி விட்டார்.

அதன் பிறகு அவர் என்ன ஆனார்? என தெரியவில்லை. இதனால் சுரேஷின் மனைவி ராஜம்மாள் தளி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஜவளகிரி வனப்பகுதியில் சுரேஷ் நேற்று காலை பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி சுரேஷ் இறந்திருக்கலாம் என்று கருதி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுரேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று சுரேஷின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சுரேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த பிரேத பரிசோதனையில், சுரேஷ் யானை தாக்கி பலியாகி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தளி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News