செய்திகள்

லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய உதவி கமி‌ஷனர் கமீல் பாஷா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

Published On 2018-04-17 08:41 GMT   |   Update On 2018-04-17 09:26 GMT
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் பிடியில் சிக்கியுள்ள உதவி கமி‌ஷனர் கமீல் பாஷா மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

திருமங்கலம் உதவி கமி‌ஷனர் கமீல் பாஷா அலுவலகத்தில் கடந்த 12-ந்தேதி நள்ளிரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலைய மாடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடந்த இந்த சோதனையில் ரூ.5 லட்சத்து 8 ஆயிரம் பணம் சிக்கியது. இதில் அவரது அலுவலகத்தில் இருந்து பாதி பணமும் மீதி பணம் கொடுங்கையூரை சேர்ந்த செல்வம் என்ற காண்டிராக்டரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டம்-ஒழுங்கு பிரிவில் உதவி கமி‌ஷனராக பணியாற்றிய ஒருவரது அலுவலகத்திலேயே புகுந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது உயர் அதிகாரிகள் மட்டத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் உதவி கமி‌ஷனர் கமீல்பாஷா மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்து கமீல்பாஷாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதன் முடிவில் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. உதவி கமி‌ஷனர் கமீல்பாஷா கைது செய்யப்படுவாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு பணியில் இருப்பவர்கள் லஞ்ச புகாரில் சிக்கி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கையாக சஸ்பெண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் உதவி கமி‌ஷனர் கமீல்பாஷா சஸ்பெண்டு செய்யப்பட உள்ளார். இதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் பிடியில் சிக்கியுள்ள உதவி கமி‌ஷனர் கமீல்பாஷா பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஓராண்டே இருப்பது குறிப் பிடத்தக்கது. #tamilnews

Tags:    

Similar News