செய்திகள்

மாங்குடி அருகே 1,200 ஆண்டுகள் பழமையான திருமால் சிற்பம் கண்டுபிடிப்பு

Published On 2018-04-17 04:22 GMT   |   Update On 2018-04-17 04:22 GMT
நெல்லை மாவட்டம் மாங்குடி அருகே 1,200 ஆண்டுகள் பழமையான திருமால் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் மாங்குடி அருகே மீனாட்சிபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலையில் இருக்கிறது. இந்த ஊரில் மேற்கு பகுதியில் 5 சிறு குன்றுகள் உள்ளன.

இதில் முதலாவது குன்றில் 1,200 ஆண்டுகள் பழமையான திருமால் சிற்பம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை நெல்லை மாவட்டம் வெள்ளங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான சங்கரநாராயணன் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சமீபத்தில் மீனாட்சிபுரம் பகுதியில் ஆய்வு செய்தோம். அங்கு அரிய திருமால் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமையான இந்த சிற்பம், முற்கால பாண்டியர் கால சிற்பம் என்று கூறலாம். தாமரை மீது நின்ற கோலத்தில் கோட்ட அமைப்பிற்குள் திருமால் சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது.

இது தற்போது சிதைந்த நிலையில் காணப்படுகிறது. நான்கு கைகளுடன் இருக்கும் இந்த திருமால் சிற்பத்தில் பின் இடதுகை சங்கை ஏந்திய நிலையில் உள்ளது. முன் இடது கை இடுப்பில் வைத்தவாறும், வலது கை அருள் வழங்கும் நிலையிலும் உள்ளன. மற்றொரு கை சிதைந்துள்ளது.

இடப்புறம் பீடத்தின் மீது வலக்காலை மடித்து இடக்காலை தொங்க விட்டு அமர்ந்த நிலையிலும், வலக்கையில் மலர்போன்ற ஒரு பொருளை ஏந்தியவாறு ஒரு தேவியும், வலப்புறம் இடக்காலை மடித்தும் வலக்காலை தொங்கவிட்டும் இடக்கையில் மலர் போன்ற ஒரு பொருளை ஏந்திய நிலையில் மற்றொரு தேவியும் என இரு தேவியர்கள் சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளன. மூன்று உருவங்களிலும் முகம் சிதைந்த நிலையிலேயே காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News