செய்திகள்

ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசை தாக்கிய வாலிபர் இதுவரை அடையாளம் தெரியவில்லை

Published On 2018-04-16 10:36 GMT   |   Update On 2018-04-16 10:38 GMT
ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசை தாக்கிய வாலிபர் இதுவரை யார் என்பது அடையாளம் காணப்படாமலேயே உள்ளது. #Cauveryissue

சென்னை:

காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அண்ணா சாலையில் கடந்த 10-ந்தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் எதிர்ப்பு போராட்டம் நடந்தது.

அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த நேரத்தில் ஏற்பட்ட மோதலில் செந்தில் குமார் என்ற போலீஸ்காரர் தாக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கொலை முயற்சி வழக்கில் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 12 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் போலீஸ்காரர் செந்தில்குமார் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் யார் என்பது அடையாளம் காணப்படாமலேயே உள்ளது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் போட்டோவை வெளியிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புகைப் படத்தில் உள்ள அவர் பற்றி தெரியவந்தால் பொது மக்கள் போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் மோகன்தாசின் செல்போன் எண்ணை 98402- 91208-என்ற நம்பருக்கு தகவல் கொடுக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

போலீசை தாக்கிய வாலிபரின் போட்டோவை அன்றைய போராட்டத்தில் பங்கேற்ற கட்சியினரிடமும் காட்டி விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் எந்த கட்சியினரும் அவனை அடையாளம் தெரியவில்லை என்று கூறிவிட்டனர்.

இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் யார் என்பது ஓரளவுக்கு அடையாளம் தெரிந்துள்ளதாகவும் விரைவில் அவரை கைது செய்துவிடுவோம் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Cauveryissue

Tags:    

Similar News