செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டங்கள் ஓயாது- மு.க.ஸ்டாலின்

Published On 2018-04-15 02:58 GMT   |   Update On 2018-04-15 02:58 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டங்கள் ஓயாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #CauveryManagementBoard #TNFight4Cauvery
சென்னை:

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எங்கெங்காணினும் எழுச்சி. எத்திசை நோக்கினும் உணர்ச்சி. எத்தர்கள் ஆளும் நாட்டில் விட்டுத்தரமாட்டோம் எமது உரிமையை என மக்கள் முன்னெடுத்த கிளர்ச்சி. இதுதான் திருச்சி முதல் கடலூர் வரையிலான காவிரி உரிமை மீட்பு பயண வழியெங்கும் நான் கண்ட காட்சி.

அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வு என்றபோதும் எந்த கட்சி சாயமும் இல்லாமல் தமிழ்நாட்டின் அடிப்படை உரிமையை மீட்பது ஒன்றே நம் குறிக்கோள் என்பதை குறிக்கும் வகையில், உரிமை மீட்பு பயணத்திற்கான கொடி ஏற்றப்பட்டு, கல்வெட்டும் திறக்கப்பட்டது.

காவிரியில் நம் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை மீட்டெடுக்கும்போது மீண்டும் அகண்ட காவிரி நிறைந்தோடும் என்ற நம்பிக்கையுடன் உரிமை மீட்பு பயணம் தொடங்கியது. மீட்பு பயணம் சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் திரண்டு வந்தனர். இளைஞர்கள் அதிகளவில் குவிந்ததுடன், பெண்கள் பலரும் பேராதரவு காட்டினர்.



பள்ளிக்கூடங்கள் இருந்த பகுதிகளைக் கடந்தபோது, மாணவ- மாணவியர் ஓடிவந்து கை கொடுத்தும், வணக்கம் தெரிவித்தும் வரவேற்றனர். ஆர்வமிகுதியால் பார்க்க வந்திருக்கிறார்கள் என கருதியபடி அவர்களிடம், “எதற்காக நாங்கள் வந்திருக்கிறோம் தெரியுமா?” என கேட்டபோது, ‘காவிரிக்காக வந்திருக்கீங்க’ என்று அவர்கள் பளிச்சென சொன்ன பதிலில், தமிழகத்தின் அடுத்த தலைமுறை எத்தனை விழிப்பாக இருக்கிறது என்பது தெரிந்தது.

இரு குழுக்களாக மேற்கொண்ட காவிரி உரிமை மீட்பு பயணம் ஏப்ரல் 12-ந் தேதி அன்று கடலூரில், கடலுடன் கடல் சங்கமித்ததைப்போல நிறைவடைந்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை மற்றொரு மக்கள் கடல். கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உணர்ச்சிமிகு உரையாற்றி, எனக்குள்ள பொறுப்பை எடுத்தியம்பினர். அவர்களின் பாராட்டுரைகளில் ஒளி வீசிய கருத்து முத்துகளை எடுத்து இதயத்தில் வைத்துள்ளேன். அதனால்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டம் ஓயாது என்பதை உறுதிபடத் தெரிவித்தேன்.

ஏப்ரல் 13-ந் தேதி அன்று அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, அதன்பின் அனைவரும் கவர்னரிடம் மனு அளிக்கச் சென்றோம். கவர்னர் மாளிகை வாயிலில் சந்தித்த செய்தியாளர்கள், “கவர்னருக்கு கருப்புகொடி காட்டிவிட்டு அவரிடமே மனு அளிக்கிறீர்களே?” என்றார்கள். அவர்களிடம், “மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயல்படும்போது அவருக்கு எங்கள் உறுதியான எதிர்ப்பை காட்டுகிறோம். காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற வேண்டியவர் மத்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பிரதமர். அந்த மத்திய அரசின் பிரதிநிதியாக இருப்பவர் கவர்னர் என்பதால் தான் அவரிடம் மனு அளிக்கிறோம்” என விளக்கம் தெரிவித்தேன்.

காவிரி உரிமையை நிலைநாட்ட மேற்கொண்ட இந்த பயணம், போராட்டக்களத்தின் ஒரு கட்டம். காவிரி டெல்டா மக்கள் நம்முடன் கரம் கோர்த்து வெற்றி பெற வைத்த பயணம். களத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.

ஆனால், யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலாண்மை வாரியம் உரிய அதிகாரங்களுடன் அணைகள் அனைத்தும் அதன்கட்டுப்பாட்டில் இயங்கி முறையான நீர்ப்பங்கீடு நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டு, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும் வரை நமது பாதை மாறாது; பயணமும் நிற்காது. உணர்வுபூர்வமான போராட்டங்கள் ஒருபோதும் ஓயாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MKStalin #CauveryManagementBoard #TNFight4Cauvery
Tags:    

Similar News