செய்திகள்

தலைமை நீதிபதி மீது தமிழக எம்.பி.க்கள் கண்டன தீர்மானம் கொண்டு வரவேண்டும் - பொன்ராஜ்

Published On 2018-04-13 09:57 GMT   |   Update On 2018-04-13 09:57 GMT
பாராளுமன்றத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது தமிழக எம்.பி.க்கள் கண்டன தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று அப்துல்கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கூறியுள்ளார்.

சேலம்:

சேலத்தில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சேலம் நுகர்வோர் குரல் அமைப்பு சார்பில் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகே அமைப்பின் தலைவர் பூபதி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பங்கேற்று கையெழுத்து இட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரி நீர் பிரச்சினையில் மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல், நீர்த்து போகச் செய்கிறது. இதற்கு கர்நாடகா மாநில தேர்தல்தான் காரணம். இந்தியாவுக்கே பிரதமர்தான் மோடி. ஆனால் அவர் தற்போது செயல்படும் விதம் கர்நாடகாவுக்கு மட்டும்தான் பிரதமரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரிய தீர்ப்பில் பாதி தண்ணீர்தான் நமக்கு கிடைத்துள்ளது. அதையும் வழங்காமல் மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டு கைகோர்த்து தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகிறது.

இதற்காக தமிழகத்தில் எத்தனை போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. தமிழகத்திற்கு எதிராக செயல்படும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரவேண்டும்.

அப்படி கண்டன தீர்மானம் கொண்டு வரும்போது இந்த வழக்கு அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்படும். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி அச்சுபிசகாமல் மத்திய அரசு அமுல்படுத்தியே ஆக வேண்டும்.

ஆனால், தமிழக எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு பயந்து அந்த தீர்மானத்தை கொண்டு வரமாட்டார்கள். எனவே, அடுத்த கட்டமாக அந்த தீர்மானத்தை தமிழக எம்.பி.க்கள் கொண்டுவரும் வகையில் எம்.பி.க்கள் வீட்டு முன்பு அனைவரும் தொடர் போராட்டம் நடத்த வேண்டும். அப்போதுதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Tags:    

Similar News