search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக எம்பி"

    • இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.
    • வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4 தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.

    இதில் பொதுமக்களின் உடமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகையை அறிவித்து வழங்கியது.

    இந்நிலையில் அதே டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் 2 மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இரண்டு மாவட்டங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.6 ஆயிரம், குறைந்த பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.1000 நிவாரண தொகையை தமிழக அரசு வழங்கியது.

    அந்த சமயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக மழை வெள்ள பாதிப்பு பற்றி எடுத்துக்கூறினார்.

    தமிழகத்தில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிவாரணத் தொகையாக ரூ.37,907.19 கோடி வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

    ஆனால் இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.

    இதனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்து வதற்காக உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு முடிவு செய்தது.

    அமித் ஷாவை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறும் குழு கேட்டுக் கொண்டனர்.

    அதன்படி டெல்லியில் தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் குழுவை சந்திக்க உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து உள்ளார். அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

    அமித்ஷாவை சந்திக்கும் குழுவில் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (ம.தி.மு.க.), சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்டு), பி.ஆர்.நடராஜன் (இந்திய மார்க்சிஸ்ட்), ரவிக்குமார் (வி.சி.க), நவாஸ்கனி (முஸ்லிம் லீக்), சின்ராஜ் (கொங்குநாடு மக்கள் கட்சி) ஆகிய 8 பேர் அமித்ஷாவை சந்திக்க செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. கூறுகையில், வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். அதை வலியுறுத்துவதற்காக உள்துறை மந்திரி அமித்ஷாவை நாளை அவரது வீட்டில் சந்திக்க உள்ளோம் என்றார்.

    ×