செய்திகள்

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை - கொட்டாரத்தில் 5 செ.மீ. பதிவு

Published On 2018-04-12 07:21 GMT   |   Update On 2018-04-12 07:21 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கொட்டாரம் பகுதியில் 5 செ.மீ. மழை பதிவாகியது.
நாகர்கோவில்:

இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தில் எப்போதும் குளுகுளு கால சூழ்நிலையே திகழும். கோடைக்காலத்தில் கூட இந்த மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியாது.

இதற்கு முக்கிய காரணம் குமரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், தென்னந்தோப்புகள் என்று அமைந்து இருந்ததுதான். சமீபத்தில் குமரி மாவட்டத்தை தாக்கிய ஒக்கி புயலில் பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன.

இதனால் ஒக்கி புயலுக்கு பிறகே குமரி மாவட்ட கால நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. வெயிலின் கொடுமையும் அதிகரித்தது. இந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாகவே குமரி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்தது.

இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே முடியாத அளவிற்கு அவதிக்குள்ளானார்கள். சுற்றுலா தலமான கன்னியா குமரியிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி முதல் தெற்கு கர்நாடகா வரை உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, கொட்டாரம், முள்ளங்கினா விளை பகுதிகளில் நள்ளிரவில் அதிக அளவு மழை கொட்டித் தீர்த்தது. நாகர்கோவிலிலும் மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்றும் நள்ளிரவில் குமரி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நள்ளிரவு 11 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. கொட்டாரம் மற்றும் சுற்றுப்பகுதியிலும் 4-வது நாளாக இந்த மழை நீடித்தது.

நாகர்கோவில், முள்ளங்கினாவிளை, மைலாடி, ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, ராஜாக்கமங்கலம், குளச்சல், புத்தன் அணை பகுதிகளிலும் மழை பெய்து உள்ளது.

குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளான பாலமோர், பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

அகஸ்தீஸ்வரத்திலும் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் கீழச்சாலை பகுதியில் ரோட்டோரத்தில் நின்ற 250 ஆண்டு பழமையான ராட்சத புளியமரம் ஒன்று சாலையில் சாய்ந்தது. இதனால் அங்கிருந்த மின் வயர்களும் அறுந்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மேலும் அந்த வழியாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இன்று காலை மின் ஊழியர்கள் அங்குச் சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

சுற்றுலா தலமான திற்பரப்பிலும் ஒரு மணி நேரம் மழை நீடித்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. சுற்றுலா பயணிகளும் அதிக அளவு அங்குச் சென்று நீராடி மகிழ்கிறார்கள்.

நள்ளிரவில் மழை பெய்தாலும் இன்று காலை முதலே வெயில் அதிகமாகவே காணப்பட்டது.
Tags:    

Similar News