செய்திகள்

லாரி மோதி முதியவர் பலி- பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-04-11 16:06 GMT   |   Update On 2018-04-11 16:06 GMT
தொப்பூர் அருகே லாரி மோதி முதியவர் இறந்தார். அவரது பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பாகல்பட்டியை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 74) இறந்து விட்டார். இவரது இறுதி சடங்கில் பங்கேற்க நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த உறவினர் சேட்டு (70) வந்திருந்தார். சடங்குகள் முடிந்து அவர் ஊருக்கு செல்ல பாகல்பட்டி பஸ்நிறுத்தம் நோக்கி சென்றார்.

அப்போது இடது பக்கமிருந்து வலது பக்கமாக அவர் சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, அந்த வழியாக தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி மாடுகளை ஏற்றிச்சென்ற லாரி மோதி, சேட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். லாரி நிற்காமல் சென்று விட்டது.

இதையறிந்த பாகல்பட்டியை சேர்ந்த சேட்டுவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேட்டுவின் பிணத்துடன் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், சாலையின் இருபுறமும் பேரிகார்டுகள், வேகத்தடைகள் அமைக்க வேண்டும், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை பிடித்து, டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் சேட்டுவின் பிணம் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News