செய்திகள்

சூரப்பா நியமனத்தை திரும்பப் பெறாவிட்டால் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி- விஜயகாந்த்

Published On 2018-04-10 02:04 GMT   |   Update On 2018-04-10 03:06 GMT
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சூரப்பா நியமனத்தை திரும்பப்பெறாவிட்டால் கவர்னர் மாளிகை நோக்கி 18-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் கண்டன பேரணி நடத்தப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை:

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சூரப்பா நியமனத்தை திரும்பப்பெறாவிட்டால் கவர்னர் மாளிகை நோக்கி 18-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் கண்டன பேரணி நடத்தப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட சுந்தர் பிச்சை மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த கே.சிவன் போன்ற தமிழர்களின் அறிவும், திறமையும் உலகளவில் உச்சத்தில் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழர் அல்லாமல் கர்நாடகத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை நியமனம் செய்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் திறமைகளையும், உணர்வுகளையும், உரிமைகளையும் பறிப்பதாகவே உள்ளது.

தமிழகத்தில் உள்ள பேராசிரியர்கள் உட்பட மொத்தம் 170 பேர் இந்த துணைவேந்தர் பதவிக்காக விருப்பம் தெரிவித்து, விண்ணப்பித்து இருந்தனர். இதில் விதிகளின் அடிப்படையில் படிப்படியாக எண்ணிக்கை குறைக்கப்பட்டு, இறுதியில் பேராசிரியர்கள் தேவராஜன், எம்.கே.சூரப்பா, பொன்னுசாமி ஆகியோருடைய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.

எந்த அடிப்படையில் 170 பேர் விண்ணப்பங்களில் 3 பேருடைய விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற விவரங்களை கவர்னர் மாளிகையில் வெளியான செய்தி குறிப்பில் வெளியிடப்படவில்லை. மேலும், இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 3 பேரில் எம்.கே.சூரப்பா தான் தகுதியானவர் என்பதை தமிழக கவர்னர் எப்படி முடிவு செய்தார் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.



எனவே கவர்னர், சூரப்பாவின் துணைவேந்தர் நியமனத்தை திரும்பப்பெற வேண்டும் என தே.மு.தி.க. சார்பில் வலியுறுத்துகிறேன். தமிழக கவர்னர் எங்களது இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் வருகின்ற 18-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணியளவில், எனது தலைமையில் கவர்னர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News