செய்திகள்

வன்கொடுமை சட்டத்தை வலிமைப்படுத்தக்கோரி திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Published On 2018-03-28 08:04 GMT   |   Update On 2018-03-28 08:04 GMT
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
  • சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார். பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வன்கொடுமைகளை தடுப்பதற்காக இயற்றப்பட்ட சட்டத்தை மாநில அரசுகள் சரிவர நடைமுறைப்படுத்துவது இல்லை. இந்த நிலையில் அந்த சட்டத்தையே முடக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். சாதி வெறியர்களுக்கு இந்த தீர்ப்பு உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. இதனால் எஸ்.சி., எஸ்.டி. மக்கள் மீதான தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகாமல் செய்வதற்கு அதை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்ப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆணவக் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை விடுதலை சிறுத்தை வரவேற்கிறது.

காவிரி நதி நீர் பிரச்சினையில் தமிழக பா.ஜ.க.வினர் கர்நாடக பா.ஜனதாவிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். தமிழக மக்களின் நலன் குறித்து கவலைப்படவில்லை. நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் தொழில்சாலை பாதிப்பு குறித்து பொது மக்களுக்கு ஆதரவாக 1-ந்தேதி எனது தலைமையில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News