செய்திகள்

பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் முதியவர்கள் அனைவரையும் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-03-27 08:02 GMT   |   Update On 2018-03-27 08:02 GMT
பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்ட முதியவர்கள் அனைவரையும் இன்று இரவுக்குள் மனுதாரரின் கருணை இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

காஞ்சீபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த முதியவர்கள் மர்மமான முறையில் இறப்பதாக சர்ச்சை எழுந்தது.

மேலும், இந்த அமைப்பின் இல்லங்களில் இருந்து இறந்த ஒருவரது பிணம், காய்கறி ஏற்றிச் செல்லும் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்த கருணை இல்லத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அந்த இல்லத்தில் தங்கியிருந்த ராமதாஸ் உள்பட 294 முதியவர்களை வருவாய் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று, வேறு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் புனித ஜோசப் கருணை இல்லத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘எங்கள் கருணை இல்லத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட ராமதாஸ் உள்பட 294 பேரை அதிகாரிகள் எங்கு அழைத்து சென்றனர் என்று தெரியவில்லை. தற்போது அவர்கள் சட்டவிரோத காவலில் உள்ளனர். எனவே, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர் கடந்த வாரம் விசாரித்தனர். அப்போது, அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட 294 பேரில் ஒருவர் தற்போது மரணமடைந்து விட்டார். அவர்களை அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை. மற்றவர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை? என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘கருணை இல்லத்தில் இருந்து வருவாய் அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற முதியவர்களில் 12 பேர் இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த முதிவர்களை முறையாக பராமரிக்கவில்லை. அதனால், அவர்கள் இறந்துள்ளனர். இதுபோல மேலும் பல முதியவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்’ என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதில், ‘மனுதாரரின் கருணை இல்லத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட 294 முதியவர்களில் பலர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

எனவே, கருணை இல்லத்தில் இருந்து அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்ட முதியவர்கள் அனைவரையும் இன்று இரவுக்குள், மனுதாரரின் கருணை இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்த பின்னர், அதுகுறித்து விரிவான அறிக்கையை வருவாய் துறை அதிகாரிகள் இந்த ஐகோர்ட்டில் நாளை தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளனர். #tamilnews

Tags:    

Similar News