செய்திகள்

சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் நகை கடை மீது அமலாக்கத்துறை வழக்கு

Published On 2018-03-24 07:25 GMT   |   Update On 2018-03-24 07:25 GMT
சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் நகை கடை நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள், பங்கு தாரர்கள் உள்பட 6 பேர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.#enforcement

சென்னை:

சென்னையில் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் ‘கனிஷ்க்’ என்ற பெயரில் தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டினம் போன்ற நகைகளை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் நகை இருப்பை அதிகம் காட்டியும், போலியான ஆண்டு நிதி அறிக்கை தயாரித்து அதிக லாபம் காட்டியும் 14 வங்கிகளில் ரூ.824.15 கோடி மோசடியாக கடன் பெற்றது.

இந்த கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியையும், நிலுவைத் தொகையையும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செலுத்தவில்லை. இதை சமீபத்தில் கண்டுபிடித்த ஸ்டேட் வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யின் வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு பிரிவில் புகார் செய்தது.

அதன் பேரில் கனிஷ்க் நிறுவனத்தின் இயக்குனர்களான பூபேஷ்குமார், அவரது மனைவி நீட்டா ஜெயின் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள பூபேஷ் குமார் ஜெயின் வீடு, அலுவலகம், தொழிலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பூபேஷ்குமார், நீட்டா ஜெயின் ஆகியோரை சி.பி.ஐ. பெங்களூர் வரவழைத்து பல கட்டங்களாக விசாரணை மேற்கொண்டது.

இந்த நிலையில் கனிஷ்க் நிறுவனத்தினர் 6 பேரும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கனிஷ்க் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள், பங்கு தாரர்கள் உள்பட 6 பேர் மீதும் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

அடுத்த கட்டமாக அவர்களிடம் விசாரணை நடத்தவும், சட்ட விரோதமாக சம்பாதித்த சொத்துக்களை முடக்கவும் அமலாக்கத்துறை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே பூபேஷ் குமார் ஜெயின் மீது சென்னையைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் போலீசில் புதிய புகார் கொடுத்தார்.

அதில் பூந்தமல்லி அருகே தனக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை வாங்குவதாக பூபேஷ்குமார் ஜெயின் ஒப்பந்தம் செய்து விட்டு அந்த ஆவணங்களை வைத்து வங்கியில் ரூ.42 கோடி கடன் பெற்று மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். #enforcementy #tamilnews

Tags:    

Similar News