செய்திகள்

அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் முறையீடு

Published On 2018-03-23 16:47 GMT   |   Update On 2018-03-23 16:47 GMT
குளித்தலை நகராட்சி 1-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
குளித்தலை:

குளித்தலை நகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று நகராட்சி ஆணையரிடம் முறையிட நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

தெற்கு மணத்தட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக பொதுக்கழிப்பிடம், குடிநீர் தொட்டி ஆகியவை உபயோகமற்று, பராமரிப்பின்றி உள்ளது. மின் மோட்டார்கள், மின் சாதனப்பொருட்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் இப்பகுதியில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்கள் பரவிவருகின்றன. இதுபோன்ற பாதிப்பால் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித பயனும் இல்லை. மேலும் சில நாட்களுக்கு முன்னர் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தோம் இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று (நேற்று) எங்கள் பகுதியின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று நகராட்சி ஆணையர் சையத்முஸ்தபாகமாலிடம் முறையிட்டபோது ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளார். உரிய நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 
Tags:    

Similar News