செய்திகள்

திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் யூனியன் அலுவலகம் முற்றுகை

Published On 2018-03-23 10:21 GMT   |   Update On 2018-03-23 10:21 GMT
திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் யூனியன் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு மட்டு மல்லாது குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சாணார்பட்டி யூனியன் ராமன் செட்டியபட்டி, கொண்டன் செட்டியபட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மோட்டார் பழுதடைந்துள்ளதால் கடந்த 15 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அடிகுழாயும் பழுதடைந்துள்ளது. இதனால் 1 டிராக்டர் தண்ணீர் (2000 லிட்டர்) ரூ.850 விலை கொடுத்து வாங்குகின்றனர்.

இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களே உள்ளனர். இதனால் அவ்வளவு பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு பல முறை புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று காலிக்குடங்களுடன் சாணார்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிராம ஊராட்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபா ராஜமாணிக்கம் தலைமையில் பணியாளர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே குடிநீர் வினியோகம் செய்யவும், பழுதடைந்த மோட்டாரை சரி செய்யவும நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News