செய்திகள்
வேலூரில் கொளுத்திய வெயிலில் சென்னை- பெங்களூரு சாலையில் காணப்பட்ட கானல்நீர்.

வேலூரில் 100 டிகிரி வெயில்- இந்த ஆண்டு 115 டிகிரியை தாண்டும் அபாயம்

Published On 2018-03-23 04:56 GMT   |   Update On 2018-03-23 04:56 GMT
வேலூரில் நேற்று 100 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு வெயில் அளவு 115 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கோடையின் தொடக்கத்திலேயே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கிறது. கடந்த 2 வாரமாக வெயில் கொளுத்தியது.

கடந்த 15-ந்தேதி 96 டிகிரி வெயில் அடித்தது. நேற்று முன்தினம் 98 டிகிரியை தொட்டது. படிப்படியாக உயர்ந்த வெயில் நேற்று 100.4 டிகிரி சுட்டெரித்தது.

மேலும் அனல் காற்றும் வீசியது. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

கடும் வெயில் காரணமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. வயதானவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

மார்ச் மாதத்திலேயே வெயில் கொடுமை அதிகமாக இருப்பதால் இன்னும் 2 மாதங்கள் எப்படி வெயிலை சமாளிக்க போகிறோம்? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உறைந்துள்ளனர்.

நடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்ப நிலையைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் பார்க்கும் போது வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு வெயில் அளவு 115 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 99 டிகிரி வெயில் பதிவானது. இரவில் அனல்காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். #Tamilnews
Tags:    

Similar News