செய்திகள்

கிண்டி கவர்னர் மாளிகையில் 5 ஆண்டுகளில் ரூ.10 கோடி மோசடி- ஷோரூம் உரிமையாளர் கைது

Published On 2018-02-28 10:34 GMT   |   Update On 2018-02-28 10:34 GMT
கிண்டி கவர்னர் மாளிகையில் மரச்சாமான்கள் மற்றும் தளவாடங்களை வாங்கியதாக போலி ரசீது தயாரித்து 5 ஆண்டுகளில் ரூ.10 கோடி மோசடியில் ஈடுபட்ட ஷோரூம் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை:

கிண்டி கவர்னர் மாளிகையில் மரச்சாமான்கள் மற்றும் தளவாடங்களை முகமது யூனிஸ் என்பவர் சப்ளை செய்து வந்தார்.

இவர் அடையாறில் பர்னீச்சர் ஷோரூம் வைத்துள்ளார். அங்கிருந்து தான் கடந்த 15 ஆண்டுகளாக கவர்னர் மாளிகைக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது.

கவர்னர் மாளிகைக்கு தளவாடங்கள் சப்ளை செய்வதில் முறைகேடு நடப்பதாக புகார்கள் வந்தன. தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற பின்பு இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டார்.

இதில் கடந்த 5 ஆண்டுகளில் மரச்சாமான்கள் சப்ளை செய்ததில் முறைகேடு நடந்து இருப்பதும் போலி ரசீது போட்டு ரூ.10 கோடி அளவுக்கு மோசடி செய்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த மோசடி பற்றி கவர்னர் துணை செயலாளர் சவுரி ராஜன் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கிண்டி உதவி கமி‌ஷனர் பாண்டியன், இன்ஸ்பெக்டர் தன்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து போலீசார் முகமது யூனிஸ் மீது வழக்குபதிவு செய்து அடையாறில் உள்ள ‘சேட் பர்னிசிங்ஸ்’ ஷோரூமில் சோதனை நடத்தினார்கள். இதில் அவர் கவர்னர் மாளிகைக்கு மரச்சாமான்கள், தளவாடங்கள் சப்ளை செய்ததற்கான போலி பில்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் தளவாடங்கள் எதுவும் சப்ளை செய்யப்படவில்லை. அவர் போலி பில்கள் மூலம் சப்ளை செய்ததாக மோசடியில் ஈடுபட்டுள்ளார்.


இவ்வாறு 5 ஆண்டுகளில் போலி பில் தயாரித்து ரூ.10 கோடி வரை மோசடி நடந்து இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது. இதையடுத்து முகமது யூனிஸ் கைது செய்யப்பட்டார்.

முகமது யூனிஸ் போலி பில்களை கவர்னர் மாளிகையில் உள்ள நிதித்துறை அதிகாரிகளிடம் வழங்கி இந்த பணத்தை பெற்றுள்ளார். அவருக்கு தளவாடங்கள் சப்ளை செய்ததாக போலி பில்கள் தயாரித்து கொடுத்தது யார்? என விசாரணை நடந்து வருகிறது. கவர்னர் மாளிகையில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் உதவியுடன் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு அதிகாரிகள் யாரும் உடந்தையாக செயல்பட்டுள்ளார்களா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

முகமது யூனிஸ் மீது மோசடி (420), போலியாக தயாரித்தல் (465), நம்பிக்கை மோசடி குற்றம் (406) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

போலீசார் அவரை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #Tamilnews
Tags:    

Similar News