செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை

Published On 2018-02-27 14:59 GMT   |   Update On 2018-02-27 15:02 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மார்ச் 3-ந்தேதி முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை:

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த ஜனவரி 2-ந் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின. கலைநயம் மிக்க ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள வீரவசந்தராயர் மண்டபம் தீப்பிடித்ததில் இடிந்து விழுந்தது.

இதனை அடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எதிர்காலத்தில் தீ விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மார்ச் 3-ந்தேதி முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின் படியும், கோயில் பாதுகாப்பு கருதியும் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

பக்தர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் செல்போனை கொண்டு வந்தால் கோயிலின் வடக்கு, மேற்கு நுழைவாயில்களில் மட்டும் பாதுகாத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன் பாதுகாத்து வைப்பதற்கு கட்டணமாக பத்து ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News