செய்திகள்

செக்ஸ், வன்முறை இல்லாத சினிமா படங்களை எடுக்கவேண்டும்- வெங்கையா நாயுடு

Published On 2018-02-24 02:33 GMT   |   Update On 2018-02-24 02:33 GMT
செக்ஸ், வன்முறை இல்லாத சினிமா படங்களை எடுக்கவேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னை:

விஜயா மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் பி.நாகி ரெட்டியின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள ஓட்டலில் நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று நாகி ரெட்டி பற்றிய புத்தகத்தை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெற்றுக்கொண்டார்.

பின்னர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நாகிரெட்டியின் நினைவு தபால் தலையை வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

நாகிரெட்டி சினிமாவில் மட்டும் புகழ் பெறவில்லை அவர் ஆஸ்பத்திரியை அன்றே நிறுவினார். இப்போது அப்பல்லோ, ஸ்ரீராமச்சந்திரா ஆஸ்பத்திரிகள் வந்துவிட்டன. ஆனால் அந்த காலத்தில் மருத்துவ சேவை செய்ய ஆஸ்பத்திரியை நிறுவியதை பாராட்டுகிறேன். அவர் பல்நோக்கு வித்தகர். மனிதநேயம் உள்ளவர்.

அவருக்கு தபால் தலை வெளியிடுகிறோம் என்றால் மற்றவர்களும் அவர் போல வரவேண்டும் என்று ஊக்கப்படுத்துவதற்காகத்தான். அவர் சினிமாத்துறையில் சாதனை படைத்தார். நல்லவர். அவர் எடுத்த படங்கள் நீண்ட நாட்கள் ஓடின. அவரை பின்பற்றி படம் எடுத்தால் நல்லது. அவருடைய படங்கள் அழகாகவும் இருந்தன. ஆரோக்கியம் தான் சொத்து என்று நினைத்தார். அது சரி. ஆரோக்கியம் இருந்தால் தான் சொத்து வரும். அப்போதைய படங்களில் செக்ஸ், வன்முறை இல்லை. அவை இருந்தால் தான் படம் ஓடுகிறது என்று நினைக்கவேண்டாம். செக்ஸ், வன்முறை இல்லாத சினிமா படங் களை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-



நாகி ரெட்டியின் அச்சகம் தெற்கு ஆசியாவில் பெரியதாக விளங்கியது. அவர் மருத்துவம், சினிமா, பத்திரிகை துறைகளிலும் சிறந்து விளங்கினார். மத்திய அரசு நாகி ரெட்டிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கியது. தமிழக அரசு கலைமாமணி விருதை வழங்கியது.

எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆன பிறகும் நாகி ரெட்டியிடம் தொடர்பு வைத்திருந்தார். அவர் சமுதாய நோக்கத்துடன் விளங்கினார். நாகி ரெட்டி அன்று தொடங்கிய ஆஸ்பத்திரி இன்று 650 படுக்கைகளுடன் உள்ளன. அந்த அளவுக்கு விரிந்து உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தலைமை தபால் துறை அதிகாரி சம்பத், விஜயா ஆஸ்பத்திரிகளின் குழும நிர்வாக இயக்குனர் பி.வெங்கட்ராமரெட்டி, அறங்காவலர்கள் பாரதி ரெட்டி, பி.வசுந்தரா, வினய் ரெட்டி, திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். #tamilnews
Tags:    

Similar News