செய்திகள்

வைரமுத்து மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

Published On 2018-02-16 12:57 GMT   |   Update On 2018-02-16 12:57 GMT
ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது பதிவு செய்யபட்ட வழக்கை விசாரிக்க சென்னை ஐகோர்ட் விதித்த தடை மார்ச் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Vairamuthu
சென்னை:

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்ட கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, சமுதாய நல்லிணக்க பேரவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் வைரமுத்து மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் கவிஞர் வைரமுத்து மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''கட்டுரையில் கடவுள் ஆண்டாள் குறித்து தான் எந்தத் தவறான கருத்தையும் குறிப்பிடவில்லை. ஓர் ஆய்வாளரின் கருத்தைத்தான் மேற்கோள் காட்டியிருந்தேன். மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, கலாசாரச் சீர்கேடுகளை ஏற்படுத்தும் நோக்கிலோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனது கருத்தை முழுமையாக அறியாமல் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இம்மனுவை கடந்த மாதம் 20-ம் தேதி விசாரித்த சென்னை ஐகோர்ட் வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க தடை விதித்தது. இந்நிலையில், வரும் மார்ச் 2-ம் தேதி வரை விசாரணைக்கான தடை நீட்டிக்கப்படுவதாக நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர். #Vairamuthu #TamilNews
Tags:    

Similar News