செய்திகள்

நிவாரண உதவி கிடைக்காததால் வயலிலேயே மயங்கி விழுந்த விவசாயி

Published On 2018-02-03 06:43 GMT   |   Update On 2018-02-03 06:43 GMT
நிவாரண உதவி கிடைக்காததால் விவசாயி வயலில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது. இதனால் பல இடங்களில் பயிர்கள் கருகி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். இதற்காக கணக்கெடுத்து நிவாரண உதவி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை தேவதானப்பட்டி பகுதி விவசாயிகளுக்கு நிவாரண உதவி கிடைக்க வில்லை. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் குள்ளப்புரம் கண்மாய் நிரம்பியது. இந்த கண்மாய் மூலம் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

இதனை நம்பி குள்ளப்புரம் பகுதியில் விவசாயிகள் நெல்சாகுபடி செய்ய தொடங்கினர். தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மழை முற்றிலும் ஓய்ந்து விட்டது. எனவே கண்மாயில் தண்ணீர் குறைய தொடங்கியது. இதனால் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

குள்ளப்புரம் கீழத் தெருவை சேர்ந்த விவசாயி கருப்பணன் (வயது70). இவர் தனது வயலில் நெல் சாகுபடி செய்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளாகவே நஷ்டத்தை சந்தித்ததால் மன உளைச்சலில் இருந்தார்.

தற்போது நிவாரண உதவி கிடைக்காததால் விவசாய கடனுக்கு வட்டிகூட கட்ட முடியாமல் தவித்து வந்தார். தண்ணீர் குறைந்து வருவதால் இந்த நெல்லும் கருகிவிடுமோ என நினைத்து திடீரென வயலிலேயே மயங்கி விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News