செய்திகள்

செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் 3பேர் கைது

Published On 2018-01-30 11:52 GMT   |   Update On 2018-01-30 11:52 GMT
சேலத்தில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் 3பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:

சேலம் குமாரசாமிபட்டி ராம்நகரில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளருமான செல்வகணபதி வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிலர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி விட்டனர்.

இதில் வீட்டில் வரண்டாவில் நிறுத்தி இருந்த கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை எரிந்து சேதமானது.

இதுதொடர்பாக அஸ்தம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அரியானூரைச் சேர்ந்த மவுலீஸ்வரன் (வயது 27), பாரப்பட்டியைச் சேர்ந்த மணி (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இன்று சேலம் கிச்சி பாளையத்தை சேர்ந்த அருள்ராம் மற்றும் வரதன் என்ற வரதராஜன், மயில் என்ற மயில்சாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைதான அருள்ராம் தி.மு.க. இளைஞரணி செயலாளராக இருந்தவர்.

இவரது நடவடிக்கை பிடிக்காமல் அருள்ராமை கட்சி பொறுப்பில் இருந்து சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் நீக்கி விட்டார்.

இதைத்தொடர்ந்து அருள்ராம் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி அணியில் இணைந்தார். சேலம் அரிசிபாளையத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை யின்போது ராஜேந்திரன்- செல்வகணபதி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்களுக்கிடையே மேலும் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் அருள்ராம் திட்டம் வகுத்து கொடுத்து ஆட்களை ஏவி செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச வைத்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. #tamilnews

Tags:    

Similar News