செய்திகள்

கும்பகோணத்தில் வைரமுத்துவை கண்டித்து ‘ஆண்டாள்’ வேடமிட்டு போராட்டம்

Published On 2018-01-21 17:17 GMT   |   Update On 2018-01-21 17:17 GMT
ஆண்டாள் குறித்து கருத்து தெரிவித்த வைரமுத்துவை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்பகோணம்:

நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்றவர்களின் வரிசையில் திருப்பாவை பாடல்களைபாடி ஸ்ரீரங்கம் பெருமாளுடன் ஐக்கியமான ஆண்டாள் தெய்வமாக வணங்கப்படுகிறார்.

இந்நிலையில் ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் கருத்தரங்கில் பேசிய கவிஞர் வைரமுத்து ஆண்டாளை தேவதாசி என்று குறிப்பிட்டார்.. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்துவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் தனது பேச்சில் தவறு இருந்தால் மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர் தனது கருத்து குறித்து நேற்று விளக்கம் அளித்தார். இருந்த போதிலும் அவரது விளக்கத்தை பல அமைப்பினரும் ஏற்று கொள்ளாமல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கும்பகோணம் காந்தி பார்க் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆண்டாளை விமர்சனம் செய்த கவிஞர் வைரமுத்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் பாலா தலைமை தாங்கினார்.திருவடிக்குடில் சுவாமிகள், பிராமணர் சங்க தலைவர் வாசுதேவன் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டாள் வேடமிட்ட சிறுமியும் கலந்து கொண்டாள். ஆண்டாள் நீதிகேட்பது போல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #tamilnews

Tags:    

Similar News