செய்திகள்

பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட போக்குவரத்து துறை அமைச்சர்

Published On 2018-01-21 05:34 GMT   |   Update On 2018-01-21 05:34 GMT
கரூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பஸ் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். #BusFareHike
கரூர்:

கரூர் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். இறந்த போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் மீட்கப்பட்டது. அதே போல் ஜெயலலிதா இறந்த போது இரட்டை இலை முடக்கப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டது.

அகில இந்திய கட்சியான காங்கிரசால் கூட அவர்களது முந்தைய சின்னத்தை மீட்க முடியவில்லை. 2 முறை சின்னத்தை மீட்ட வரலாறு அ.தி.மு.க.வுக்கே சொந்தம். ஆர்.கே.நகர் இடைத்தேர்லில் தில்லாலங்கடி வேலைகள் செய்து வெற்றி பெற்றுள்ளனர். அதுபோல் தமிழகம் முழுவதும் வெற்றி பெற முடியாது. வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க . வெற்றி பெறும்.

போக்குவரத்து துறையில் தவிர்க்க முடியாத காரணங்களால் பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டுமானால் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற சூழல் இருந்தது.

இதனை பேச்சுவார்த்தையின் போது கம்யூனிஸ்டு கட்சி தொழிற்சங்கங்கள் சரி என்று சொல்லி விட்டு, தற்போது பஸ் கட்டணத்தை உயர்த்திய பின் எதிர்ப்பு தெரிவித்து நாடகமாடுகின்றனர். பஸ் கட்டண உயர்வை பொதுமக்கள் மன்னிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #TamilNews #BusFareHike
Tags:    

Similar News