செய்திகள்
லண்டனை சேர்ந்த பெண்கள் வைகோவை சந்தித்தபோது எடுத்த படம்.

பென்னிகுவிக் கல்லறையை புதுப்பிக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

Published On 2018-01-20 03:20 GMT   |   Update On 2018-01-20 03:20 GMT
லண்டனில் உள்ள பென்னிகுவிக் கல்லறையை புதுப்பிக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் பென்னிகுவிக் உடல் லண்டன் செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. 100 ஆண்டுகள் கடந்துவிட்டதால் அந்த கல்லறை அகற்றப்பட்டு, அந்த இடம் வேறு ஒருவருக்கு வழங்கப்பட இருப்பதாக அறிந்த உத்தமபாளையத்தை சேர்ந்த சந்தனபீர் ஒலி அதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

அதற்கு பென்னிகுவிக் செய்த சாதனை, அவரை தமிழக மக்கள் எந்த அளவிற்கு புகழ்கிறார்கள் என்பதற்கான சான்றுகளை தரவேண்டும். எனவே, லண்டன் தேவாலயத்தின் செயலாளர் சூசன் பெர்ரோ, ஷெரோன் பில்லிங் ஆகிய இருவரும் தமிழகத்திற்கு வந்தனர். அவர்களை மதுரை விமான நிலையத்தில் வைகோ வரவேற்றார்.

பின்னர் அவர்கள் இருவரும், பொங்கல் திருநாளின்போது முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் பென்னிகுவிக்குக்கு செய்கின்ற சிறப்புகளை நேரில் பார்த்தனர். அதன் அடிப்படையில், பென்னிகுவிக் கல்லறையை அகற்றுவது இல்லை என அவர்கள் உடனடியாக முடிவெடுத்து அதற்கான கடிதத்தை தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க வைகோ மேற்கொண்ட போராட்டங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ம.தி.மு.க. தலைமை அலுவலகம் வந்து வைகோவை சந்தித்து பேசினர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து வைகோ நிருபர்களிடம் கூறும்போது, ‘கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது மதுரையில் பென்னிகுவிக் சிலை அமைத்தார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது பென்னிகுவிக்குக்கு மணிமண்டபம் கட்டி, அவரது சிலையை நிறுவினார். தேனி பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்டினார். எனவே, லண்டனில் உள்ள பென்னிகுவிக் கல்லறையை புதுப்பித்து அங்கே அவருக்கு ஒரு சிலை அமைக்கவும், தேனி பேருந்து நிலையம் முன்பு ஒரு சிலை நிறுவிடவும் தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்’ என்றார். #tamilnews

Tags:    

Similar News