செய்திகள்

கார்த்தி சிதம்பரம் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு

Published On 2018-01-13 09:21 GMT   |   Update On 2018-01-13 09:21 GMT
சென்னை மற்றும் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் நடந்த அமலாக்கத்துறையின் சோதனை நிறைவு பெற்றது.
சென்னை:

சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரிபவன் அருகில் பைகிராப்ட்ஸ் தெருவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீடு உள்ளது.

இன்று காலை 7.45 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இங்கு திடீர் என்று சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்கள் டெல்லியில் இருந்து வந்திருந்தனர். சோதனை நடந்த போது ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மருமகள் ஸ்ரீநிதி, பேத்தி ஆகியோர் இருந் தனர். ப.சிதம்பரம் டெல்லியில் இருந்தார். கார்த்தி சிதம்பரம் சிவகங்கை சென்றிருந்தார்.

சோதனையின் போது ப.சிதம்பரத்தின் வீட்டு முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. காலை 10.45 மணிக்கு இந்த சோதனை முடிந்தது. மொத்தம் 3 மணி நேரம் சோதனை நடந்தது.

ப.சிதம்பரத்தின் பூர்வீக வீடு காரைக்குடியில் உள்ளது. அங்கும் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

நுங்கம்பாக்கம் எல்ரோடா கட்டிடத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் அலுவலகத்திலும், டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக ப.சிதம்பரம் கூறியதாவது:-

அமலாக்கத்துறையின் சோதனை திட்டதிட்ட நாடகம். இந்த சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை. அமலாக்கத் துறையின் நாடகத்தை ஏற்கனவே நான் எதிர்பார்த்திருந்தேன்.

ஏர்செல் மேக்கிஸ் வழக்கில் 3 முறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் எந்த விசாரணை அமைப்பும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. சட்ட விரோத பணப்பரிமாற்றத்தை அம லாக்கத்துறை விசாரிக்க முடியாது. அமலாக்கத்துறை விசாரிக்க தகுதி இல்லை.

கார்த்தி சிதம்பரம் டெல்லியில் என் வீட்டில் வசிக்கிறார் என்று நினைத்து சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள இல்லத்தில் படுக்கை அறை மற்றும் சமையல் அறையில் சோதனை நடந்தது. பின்னர் மன்னிப்பு கேட்டு சென்றார்கள்.

கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இவ்வாறு அவர் கூறினார்.

சோதனை தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் வக்கீல் அருண் நடராஜ் கூறியதாவது:-

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. சோதனையின் போது எந்த ஆவணங்களையும் அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News