செய்திகள்

வீடு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்க வேண்டும்: வரலட்சுமி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2018-01-13 08:33 GMT   |   Update On 2018-01-13 08:33 GMT
ஊரப்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்க வேண்டும் என்று வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கேட்ட கேள்வி வருமாறு:-

ஊரப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் தமிழ்நாடு குடிசைப் மாற்று வாரியத்தினால் ஒதுக்கீடு பெற்றவர்களில் முழுத் தொகையையும் செலுத்தியவர்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்க அரசு ஆவன செய்யுமா?

துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- இத்திட்டப் பகுதியினுடைய நிலம் வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்ய அரசிடம் அரசாணை பெற பிரேரணை காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது. நிலமாற்ற அரசாணை வரப் பெற்றதும் கிரையப் பத்திரம் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலட்சுமி மதுசூதனன்:- ஊரப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் செல்லியம் மன்நகர் பகுதியில் சர்வே எண்.165, 169 மற்றும் 171 சர்வே எண் உள்ள பகுதிகளை தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் 1993 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது.

அதே ஆண்டில் குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கீடு செய்து சுமார் 186 பேருக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒதுக்கீடு பெற்றதில் 96 பேர் முழுத் தொகையையும் செலுத்தி வாரியத்திடம் தவணை ஏதும் இல்லையென்று தடையில்லா சான்றும் பெற்றுள்ளனர். முழுத் தவணைத் தொகையையும் செலுத்தியவர்களுக்கு இதுவரை அரசு விற்பனைப் பத்திரம் வழங்கவில்லை. ஆகவே, பணம் முழுமையாகச் செலுத்தியவர்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம்:- மாவட்ட ஆட்சியருக்கு நில உரிமை மாற்றப் பிரேரணை அனுப்பப்பட்டிருக்கிறது. அவருடைய பரிசீலனையில் இருக்கிறது. நேற்று நேரடியாக அவரையும் நான் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறேன். கூடிய விரைவில் நிலமாற்றப் பிரேரணை அரசுக்கு வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் உரிமை மாற்றம் தரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News