செய்திகள்

இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் பணியை நாராயணசாமி தொடங்கி வைத்தார்

Published On 2018-01-12 06:40 GMT   |   Update On 2018-01-12 06:40 GMT
புதுச்சேரியில் இன்று கோவிந்தசாலையில் உள்ள ரே‌ஷன் கடையில் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் பணியை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். #PongalGift #Narayanasamy
புதுச்சேரி:

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் புதுவையில் அனைத்து ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கப்படும்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி இலவச பொருட்கள் வழங்குவதற்கான கோப்பை அரசு தயாரித்து கவர்னருக்கு அனுப்பியது. சிகப்பு ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் இலவச பொருட்கள் வழங்கும்படி கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் இந்த ஆண்டு இலவச பொங்கல் பொருட்கள் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் சிவா, அனந்தராமன் ஆகியோர் கவர்னரை நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, இலவச அரிசி, துணி, பொங்கல் பொருட்கள் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். நேற்று முன்தினம் இரவு கவர்னர் இலவச பொங்கல் பொருட்கள் வழங்க அனுமதி அளித்தார்.

இதற்கிடையில் நிலுவை சம்பளம் வழங்கக்கோரி ரே‌ஷன்கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் அனைத்து ரே‌ஷன் கடைகளும் மூடிக்கிடந்தது. இதனால் மீண்டும் பொங்கல் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து நேற்றைய தினம் அமைச்சர் கந்தசாமி, ரே‌ஷன்கடை ஊழியர்கள் சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் அமைச்சர் கந்தசாமி, நாளை காலையில் இலவச பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவித்தார்.

இதன்படி இன்று கோவிந்தசாலையில் உள்ள ரே‌ஷன் கடையில் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ. சிவா தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். முதல்-அமைச்சர் நாராயணசாமி பொங்கல் பொருட்கள், இலவச அரிசி விநியோகத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.

பாப்ஸ்கோ சேர்மன் தனவேலு எம்.எல்.ஏ. வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுமான், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பொங்கல் பொருட்களாக பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, முந்திரி, ஏலக்காய் ஆகிய 5 பொருட்கள் வழங்கப்பட்டது. புதுவை, காரைக்கால், ஏனாம் ஆகிய 3 பிராந்தியங்களில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 244 ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4.33 கோடி செலவில் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

மேலும் சிகப்பு ரே‌ஷன்கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரே‌ஷன்கார்டுதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் பொங்கல் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என தெரிவித்தனர். ஆனால் ரே‌ஷன்கடை ஊழியர்கள் இதுவரை போராட்டத்தை கைவிடவில்லை. அவர்கள் தலைமை செயலகம் முன்பு தர்ணா நடத்தி வருகின்றனர். ரே‌ஷன்கடைகள் தொடர்ந்து மூடியே கிடக்கிறது. எனவே பொங்கல் பொருட்கள் பொங்கலுக்கு முன்பு பொது மக்களுக்கு கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. #PongalGift #Tamilnews
Tags:    

Similar News