செய்திகள்

திருச்சி அரசு பஸ் கண்டக்டர் மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம்

Published On 2018-01-11 14:54 GMT   |   Update On 2018-01-11 14:54 GMT
போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய அரசு பஸ் கண்டக்டர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி:

திருச்சி மண்டலத்தில் கடந்த 4-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை அளிக்க கோரி நடந்து வரும் இந்த போராட்டத்தில் 9 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 9-ந்தேதி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் போக்குவரத்து கழக அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதற்கிடையே அரசு போக் வரத்து கழகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவரும் அரசு கோரிக்கையை ஏற்று உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்தது. இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

ஆனாலும் ஊழியர்கள் பணிக்கு திரும்பாததால் அவர்களுக்கு முன்னெச்சரிக்கை நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி மண்டலத்தில் மட்டும் நேற்று வரை 2,469 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் புறநகர் கிளையில் கண்டக்டராக பணியாற்றி வந்த வெங்க டேஷ் (வயது 47) என்பவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரண மடைந்தார். கடந்த 8-ந் தேதி திருச்சி போராட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய வெங்கடேசுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவர் திருச்சியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார்.

அவரது உடல் திருச்சி தஞ்சை ரோடு கல்லணையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. வெங்கடேஷ் உடலுக்கு ஏராளமான தொழிற் சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். வெங்கடேஷ் தி.மு.க. தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.

திருச்சியில் இருந்து சேலம் செல்லும் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றினார். அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews

Tags:    

Similar News