செய்திகள்

வைரமுத்தை இழிவுபடுத்தி பேசுவதா? எச்.ராஜாவுக்கு சீமான் கண்டனம்

Published On 2018-01-11 06:18 GMT   |   Update On 2018-01-11 06:18 GMT
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரைக்கு எச்.ராஜா தரம் தாழ்ந்த சொற்களால் அவரை தாக்கிப் பேசியதற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழை ஆண்டாள் என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையை முன் வைத்து எச்.ராஜா தரம் தாழ்ந்த சொற்களால் கவிஞர் வைரமுத்துவைத் தாக்கிப் பேசியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும்.

ஆண்டாளை இழிவுப்படுத்தவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி எவரையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல யாரேனும் புண்பட்டிருந்தால் வருந்துவதாக அவர் கூறிய பின்னரும் பாரதிய ஜனதா கட்சியினர் அவரை இழிவாகப் பேசுவதையும் மிரட்டுவதையும் அக்கட்சியின் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் எவ்வகையில் ஏற்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

கவிஞர் வைரமுத்து இவ்வினத்தின் பெருமை மிக்க இலக்கிய அடையாளங்களில் ஒருவர். அவரின் தமிழ் காலம் தாண்டி நிற்கக்கூடியவை. சாகித்ய அகாடமி விருது பெற்ற கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் ஆகிய அவரது படைப்புகள் தமிழர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

தனது எழுத்துக்களால் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் தமிழினத்தின் பெருங்கவி ஒருவரை இவ்வாறு தடித்த வார்த்தைகளால் மிரட்டுவதையும், இழித்துரைப்பதையும் எந்த உணர்வுமிக்கத் தமிழனும் ஏற்க மாட்டான். வைரமுத்து என்ற ஒருவரை பழிப்பது, அவரது பிறப்பை பழிப்பது போன்றவை அவர் ஒருவருக்கான இழுக்கல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான இழுக்கு.



ஆண்டாள் பாடல்களில் ஒருவரி கூட சமஸ்கிருதச் சொல்லாடல்களை எங்கும் காண இயலாது. அவ்வாறு இருக்கையில் சமஸ்கிருதமே இந்தியாவின் தாய் மொழி என கூறும் எச்.ராஜா போன்றோருக்கு ஆண்டாள் பற்றிப் பேச எவ்விதத் தார்மீக உரிமையும் கிடையாது.

வரலாற்றில் தமிழர்கள் ஒருபோதும் இந்துக்களாக அடையாளப்படுத்தப்படவில்லை; அவர்கள் சைவர்களாக, வைணவர் களாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு இறை நம்பிக்கைகளை இந்து எனும் ஒற்றை அடையாளத்திற்குள் அடக்க நினைக்கும் பா.ஜ.க.வின் பாசிசப் போக்கினை தமிழர்களால் ஏற்க இயலாது.

எனவே, தமிழினத்திற்கும், தமிழ் மொழிக்கும் எவ்விதத் தொடர்புமற்ற எச்.ராஜா, தமிழினத்தின் பெருங்கவியான கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை இழிவுப்படுத்தியதற்கு வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையேல், அதற்கான கடும் எதிர் வினைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News