செய்திகள்

அம்ருதா வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க ஜனவரி 25-ம் தேதி வரை அவகாசம் அளித்தது ஐகோர்ட்

Published On 2018-01-05 10:08 GMT   |   Update On 2018-01-05 10:08 GMT
ஜெயலலிதாவின் வாரிசு என உரிமை கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு ஜனவரி 25-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரது மகள் என உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், தான் ஜெயலலிதாவின் மகள் என்றும், அதனை உறுதி செய்ய டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், வழக்கு தொடர்பாக தமிழக அரசு, தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி, ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 5-க்கு நீதிபதி வைத்தியநாதன் ஒத்திவைத்தார்.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி வைத்தியநாதன், தமிழக அரசு ஜனவரி 25-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அ.தி.மு.க. பிரமுகர் ஜோசப்பை வழக்கில் இணைப்பதற்கு அம்ருதா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது,  எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் ஜோசப்பை வழக்கில் இணைக்க வேண்டும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என முதலில் முடிவுசெய்யலாம் என கூறினார்.

கடந்த முறை வழக்கு விசாரணையின்போதும், நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். வழக்கைத் தொடுத்தவர் உண்மையான வாரிசா என முடிவு செய்த பின்னரே உடலை ஒப்படைப்பது குறித்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்றும், அதற்கு ஏன் முதலில் டி.என்.ஏ சோதனை செய்யக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News