செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் ஆருத்ரா தரிசனம்: பக்தர்கள் வழிபாடு

Published On 2018-01-03 17:28 GMT   |   Update On 2018-01-03 17:28 GMT
ராமேசுவரம் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் மாணிக்க வாசகர் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை ஸ்படிக லிங்க பூஜையும், அதனை தொடர்ந்து வழக்கமான பூஜைகளும் நடைபெற்றது.

பின்னர் கோவிலின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள ஒரு லட்சம் ருத்ராட்சைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நடராஜர் சன்னதியில் அதிகாலை 3 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்பாள் ஆகியோருக்கு பால், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அப்போது சாமி-அம்பாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து காலை 11 மணி அளவில் நடராஜன், சிவகாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலின் நான்கு ரதவீதிகளிலும் உலா வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், பேஸ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வம், செல்லம் ஆகியோர் செய்திருந்தனர். விழாவையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெயந்தி, பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். #temple
Tags:    

Similar News