செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.31 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்கு

Published On 2018-01-02 14:21 GMT   |   Update On 2018-01-02 14:21 GMT
வேலை வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.31 லட்சம் மோசடி செய்ததாக பாரதியார் பல்கலைக்கழக தொலை தூர கல்வி மைய இயக்குனர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
திருச்சி:

திருச்சி லால்குடி அருகே உள்ள விரகாலூரை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 38). இவர் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலை தூர கல்வி மையத்தின், திருச்சி கிளை இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். அந்த பல்கலைக்கழகத்தில் தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2015-ம் ஆண்டு தன்னிடம் ரூ.9 லட்சம் பெற்றுக்கொண்டார். அப்போது வேலைக்கான ஒரு உத்தரவு ஆணையை வழங்கினார்.

அதை பல்கலைக்கழகத்தில் கொடுத்த போது அது போலி ஆணை என்று தெரிந்தது. இதைத்தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்ட போது அவர் பணம் தர மறுத்து வருகிறார். எனவே பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதே போன்று தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த சின்னதுரை என்பவர் அதே கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கும் அதே பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் ரவிக்குமார் ரூ.22 லட்சம் பெற்றுக்கொண்டு போலியான வேலை ஆணையை வழங்கினார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

2 மனுக்களை விசாரித்த நீதிபதி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலை தூர கல்வி மைய இயக்குனர் ரவிக்குமார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News