செய்திகள்

புத்தாண்டு விடுமுறை: பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2018-01-02 11:54 GMT   |   Update On 2018-01-02 11:54 GMT
புத்தாண்டையொட்டி பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் மற்றும் கல்லூரி மாணவர்களும் திருமூர்த்தி மலைக்கு வந்திருந்தனர்.
உடுமலை:

புத்தாண்டையொட்டி பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் மற்றும் கல்லூரி மாணவர்களும் திருமூர்த்தி மலைக்கு வந்திருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்கிருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளை நீராதாரமாக கொண்ட இந்த அருவிக்கு பருவ மழைகாலங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகின்றது. பஞ்சலிங்க அருவியின் இயற்கை சூழலை ரசிக்கவும் அதில் குளித்து மகிழவும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. அதன் எதிரொலியாக மேற்குதொடர்ச்சி மலைகளில் உள்ள பாலாறு, உழுவி ஆறு, கொட்டைஆறு, பாரப்பட்டி ஆறு குருமலை ஆறு வண்டிஆறு, உப்புமண்ணம் ஓடை. கிழவிபட்டி ஓடை உள்ளிட்ட சிற்றாறுகள் மற்றும் வனப்பகுதியில் உள்ள ஓடைகள் மூலமாக பஞ்சலிங்க அருவிக்கு நிலையான நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அருவியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சீரான நீர்வரத்து உள்ளது. இதனால் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதற்காக திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகளின் மற்றும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில பத்தாண்டையொட்டி வந்த தொடர் விடுமுறைகளால் கடந்த வாரத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர்கள் எண்ணிக்கையும் திருமூர்த்திமலையில் அதிகளவில் காணப்படுகிறது. அவர்களுடன் வெளிமாநில சுற்றுலா பயணிகளும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் திருமூர்த்திமலைக்கு சுற்றுலா வருகின்றனர். பின்னர் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

புத்தாண்டையொட்டி பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் மற்றும் கல்லூரி மாணவர்களும் திருமூர்த்தி மலைக்கு வந்திருந்தனர்.

இதனால் அருவி பகுதியில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதையடுத்து அனைவரும் வரிசையில் நின்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அதன் பின்னர் அடிவாரத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிச் சென்றனர்.
Tags:    

Similar News