செய்திகள்

பயிர் காப்பீட்டு நிலுவை தொகை வழங்ககோரி தஞ்சை விவசாயி தீக்குளிக்க முயற்சி

Published On 2017-12-29 12:27 GMT   |   Update On 2017-12-29 12:27 GMT
தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயிர் காப்பீட்டு நிலுவை தொகை வழங்ககோரி விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் இன்று காலை நடந்தது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு கொடுக்க வந்தனர். இதில் ஒரத்தநாடு தாலுகா திருநல்லூரை சேர்ந்த கண்ணப்பன் என்ற விவசாயி ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் ஊற்றி மறைத்து எடுத்து வந்துள்ளார்.

அவர் திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். போலீசார் தடுத்ததையும் மீறி அவர் மண்எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டதால் உடனடியாக தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இதனால் ஆவேசமடைந்த உடன் வந்த விவசாயிகள் போலீசாரை தடுத்து எங்கு அழைத்து செல்கிறீர்கள் என்று கேட்டனர். மண்எண்ணெய் அவரது வாயில் பட்டுள்ளதால் வயிற்றுக்கு சென்று விட்டதா என தெரியவில்லை. அவரை மருத்துவமனைக்குதான் அழைத்து செல்கிறோம். வழக்கு எதுவும் போடமாட்டோம் என்று கூறியதால் சமாதானமடைந்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விவசாயிகள் அனைவரும் கலெக்டரிடம் சென்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- நெல், கரும்புக்கு இந்த ஆண்டு இதுவரை அரசு விலை நிர்ணயம் செய்யவில்லை. கரும்புக்கான நிலுவைத் தொகை, பயிர் காப்பீட்டு தொகையும் முழுமையாக வழங்கப்படவில்லை. இந்த வருடம் மேட்டூர் அணை திறந்தும் முழுமையாக பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் பயிர்கள் காய்ந்து வருகிறது.

தமிழக அரசு செயலற்ற அரசாகவே உள்ளது. இதுபோல் அரசு இருந்தால் விவசாயிகள் சாவதை தவிர வேறு வழியில்லை. அதனால் தான் விவசாயி கண்ணப்பன் மனமுடைந்து மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News