செய்திகள்

போலி சாதி சான்றிதழ் கொடுத்து மோசடி: புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் கைது

Published On 2017-12-23 10:30 GMT   |   Update On 2017-12-23 10:30 GMT
புதுவையில் போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து மோசடி செய்த பல்கலைக்கழக பேராசிரியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை மாநிலம் காரைக்கால் தலத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் இவருடைய சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும்.

இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். 2 மாதம் பணியாற்றிய இவர் தனது பணியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் சுரேஷ் குமார் கடந்த 2009-ம் ஆண்டு புதுவை பல்கலைக்கழகம் காரைக்கால் கிளையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை யில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார். இதற்கிடையே புதுவை என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் தனஞ்செயன் புதுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதில், சுரேஷ்குமார் கடந்த 2007-ம் ஆண்டு புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்துள்ளார்.

அப்போது அவர் போலியாக சாதி சான்றிதழ் (இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு) வழங்கி பணியில் சேர்ந்து, பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

அதன்பேரில் புதுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் சுரேஷ்குமார் போலியாக சாதி சான்றிதழ் கொடுத்து விரிவுரையாளர் பணியில் சேர்ந்து பின்னர் ராஜினாமா செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் காரைக்காலில் சுரேஷ் குமாரை அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அதை தொடர்ந்து அவரை போலீசார் புதுவைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News