செய்திகள்

எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணிநேரம் தாமதம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

Published On 2017-12-22 16:37 GMT   |   Update On 2017-12-22 16:37 GMT
எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணிநேரம் தாமதமானதால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 10 அரசு பஸ்களில் பயணிகள் சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேலம்:

சேலம்-விருத்தாசலம் மார்க்கத்தில் ஆளில்லாத லெவல் கிராசிங்களில் 3 இடங்களில தரைப்பாலம் அமைக்கப்படுகிறது.

இதனால் விருத்தாசலம் பயணிகள் ரெயில், எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய ரெயில்கள் ஆத்தூரில் அரை மணிநேரம் நின்று தாமதமாக செல்லும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஆத்தூர் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

அந்த ரெயில் அங்கு அரைமணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் புறப்படுவதற்காக பாலப்பணி நடைபெறும் இடத்தில் இருந்து சிக்னல் கிடைக்காததால் 2 மணிநேரம் தாமதமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் 10 அரசு பஸ்களை வரவழைத்து பயணிகளை அதில் ஏற்றி சேலம் அனுப்பி வைத்தனர்.

பின்னர் அந்த ரெயில் ஆத்தூரில் இருந்து 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு காலை 9 மணியளவில் சேலம் வந்தடைந்தது.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News