செய்திகள்

கோவையில் 19 வயதில் துறவறம் பூண்ட தொழில் அதிபர் மகன்

Published On 2017-12-17 10:15 GMT   |   Update On 2017-12-17 12:36 GMT
கோவையில் 19 வயது தொழில் அதிபர் மகன் துறவறம் பூண்டார். அவரை ஜெயின் சமூக பெண்கள் நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர்.

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ் ஜெயின். தொழிலதிபர். இவரது மகன் நிமிட்ஸ் (19). பிளஸ்-2 முடித்துள்ளார். இவர் ஜெயின் சமூகப்படி குருகுல கல்வி பயில விருப்பபட்டார்.

இதனை தொடர்ந்து குஜராத் மாநிலம் சூரத்தில் குருகுல கல்வி பட்டம் பெற்றார். பின்னர் அவர் கோவை திரும்பினார். வாலிபர் நிமிட்சின் துறவற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி கோவை ரெங்கே கவுடர் வீதியில் உள்ள சுபாஸ் நாதம் கோவிலில் இருந்து தொடங்கியது. இதனை தொடர்ந்து நிமிட்ஸ் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் அங்கிருந்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். ஜெயின் கோவில் சந்திர விஜய் சூரி மகராஜ் ஆச்சாரியா நிகழ்ச்சியை நடத்தினார்.

ஊர்வலத்துக்கு முன் ஆதி நாத் சுவாமி தேரில் கொண்டு செல்லப்பட்டார். அதற்கு பின்னால் நிமிட்ஸ் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது ஜெயின் சமூக பெண்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடியபடி தெருக்களில் சென்றனர்.

இந்த ஊர்வலம் சுக்ரவார் பேட்டை, ஏ.கே.என். நகர், பொன்னைய ராஜபுரம் வழியாக அங்குள்ள முனிஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. பின்னர் சொக்கம் புதூர் சென்றது.

ஊர்வலம் சென்ற பாதையில் உள்ள தெருக்களை ஜெயின் சமூக பெண்கள் சுத்தம் செய்த வண்ணம் சென்றனர். மேலும் ஊர்வல பாதையில் பால், தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான ஜெயின் சமூக ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

நாளை சூரத் செல்லும் நிமிட்ஸ் வருகிற 27-ந் தேதி அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் துறவறம் மேற்கொள்கிறார். பின்னர் மீண்டும் அவர் கோவை திரும்புகிறார்.

துறவறம் பூண்ட பின் சொகுசு வாழ்க்கை வாழ கூடாது. ஏ.சி., செல்போன் உள்ளிட்டவைகளை பயன்படுத்தக் கூடாது. வீட்டில் தங்க கூடாது. கோவிலில் தான் தங்க வேண்டும். ஆடம்பர உடைகள் அணிய கூடாது. தானே தான் சமைத்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் தர்மம் எடுத்து சாப்பிட வேண்டும்.

கையில் குச்சியை வைத்து கொண்டு தான் நடமாட வேண்டும் உள்ளிட்டவைகளை கடை பிடிக்க வேண்டும். கோவையில் இதுவரை ஜெயின் சமூகத்தை சேர்ந்த பெண்கள் தான் துறவறம் பூண்டுள்ளனர். தற்போது 19 வயது கோடீஸ்வர வாலிபர் துறவறம் பூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News