செய்திகள்

ஜெ. கைரேகை வழக்கு: சுப்ரீம் கோர்ட் தடையை அடுத்து விசாரணையை ஒத்திவைத்தது ஐகோர்ட்

Published On 2017-12-15 09:32 GMT   |   Update On 2017-12-15 09:32 GMT
தேர்தல் ஆணைய படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்திருந்தது தொடர்பான வழக்கை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதால், வழக்கு விசாரணையை ஐகோர்ட் ஒத்திவைத்தது.
சென்னை:

கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 8-ம் தேதி ஆஜரான சிறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ், சிறையில் அடைக்கப்பட்ட போது ஜெயலலிதாவின் கைரேகையை பெறவில்லை என விளக்கமளித்தார். ஜெயலலிதாவுக்கு ஆதார் அட்டை உள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி நாகராஜன், அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், தேவைப்பட்டால் கைரேகையை ஒப்பிட்டு பார்க்கலாம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர். இதற்கிடையே, ஜெயலலிதாவின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்க தடை விதிக்க கோரி ஏ.கே போஸ் அதே நாளில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

போஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஜெயலலிதா கைரேகை தொடர்பான ஆவணங்களை சோதனை செய்வதற்கும், இது தொடர்பான வழக்கை விசாரிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், டாக்டர் சரவணன் உள்பட வழக்கில் தொடர்புடைய 28 பேரும் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதால், இவ்வழக்கின் மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் நீதிபதி நாகராஜன் ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News