செய்திகள்

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஊழல் - ரூ.50 கோடி வரை கைமாறியதாக புகார்

Published On 2017-12-13 06:02 GMT   |   Update On 2017-12-13 06:28 GMT
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர்களை தேர்வு செய்வதற்காக நடந்த தேர்வில் தேர்வான 220-க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் சான்றிதழில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை:

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது அம்பலமானது.

வியாபம் ஊழல் என்றழைக்கப்பட்ட அந்த ஊழல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஊழலில் பியூன் முதல் மந்திரி வரை சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

அந்த வியாபம் ஊழல் போன்றே தமிழ்நாட்டிலும் ஆசிரியர் தேர்வில் ஊழல் நடந்து இருப்பதாக தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி நுழைவு தேர்வு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் அந்த நுழைவு தேர்வை எழுதினார்கள்.

அந்த தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 7-ந்தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து தேர்வானவர்கள் சான்றிதழ் பரிசீலனைக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். சுமார் 2 ஆயிரம் பேரின் சான்றிதழ்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

அப்போது 220-க்கும் மேற்பட்டவர்களின் சான்றிதழ்களில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தேர்வானவர்களின் மதிப்பெண் சான்றிதழில் முறைகேடுகள் இருப்பதாக அறிந்தனர். இதையடுத்து இது தொடர்பாக அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

அந்த விசாரணையின் போது நுழைவு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் திட்டமிட்டு திருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதாவது மதிப்பெண் சான்றிதழ்கள் ஸ்கேன் செய்யப்பட்டபோது திருத்தப்பட்டு இருப்பது தெரிந்தது.

200 மதிப்பெண்களுக்கு 50 மதிப்பெண் எடுத்தவர்கள் 150 மதிப்பெண்கள் எடுத்தது போல திருத்தங்கள் நடந்து இருப்பது உறுதியானது. இதற்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த சான்றிதழ் மாதிரி சோதனை அடிப்படையில்தான் நடத்தப்பட்டது. அந்த சோதனையிலேயே மதிப்பெண் சான்றிதழ்களில் தில்லுமுல்லு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை நடந்துள்ள ஆய்வில் இந்த முறைகேடு ரூ.50 கோடி வரை சம்பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த முறைகேட்டில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டு இருப்பதாக தெரிய வந்தாலும் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் தில்லுமுல்லு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தில்லுமுல்லில் ஈடுபட்டு இருப்பவர்கள் யார்-யார் என்ற விவரம் பேஸ்புக் குழு ஒன்றிலும் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து இதுபற்றி மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தேர்வில் நடந்துள்ள மதிப்பெண் சான்றிதழ் திருத்தம் முறைகேடு பற்றி இதுவரை போலீசில் புகார் கொடுக்கப்படவில்லை. அதிகாரிகள் மட்டத்திலேயே விசாரணை நடந்து வருகிறது.


Tags:    

Similar News