செய்திகள்

ரே‌ஷன் கடைகளில் மண்எண்ணெய் அளவை குறைப்பதா?: இரா.முத்தரசன் கண்டனம்

Published On 2017-12-11 10:35 GMT   |   Update On 2017-12-11 10:35 GMT
ரே‌ஷன் கடைகளில் மண்எண்ணெய் அளவை குறைப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

இந்தியக் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஏழை, எளிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொள்வது மிக கவலைக்குரியது. குறிப்பாக ஏழை, எளிய மக்கள் அரசால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளையே நம்பியுள்ளனர்.

நியாயவிலை கடைகள் மூலம் ரூ.13.50க்கு வழங்கப்பட்டு வந்த சர்க்கரை விலை திடீரென ரூ.25 ஆக உயர்த்தப்பட்டது பேரதிர்ச்சியாகும்.

அதனைத் தொடர்ந்து உளுந்தம் பருப்பு நிறுத்தப்பட்டது. துவரம் பருப்பும் நிறுத்தப்பட்டு மாற்றாக மைசூர் பருப்பை வழங்கி வருகின்றனர். இதனை பொதுமக்கள் பெரிதும் விரும்பவில்லை.

இந்நிலையில் தற்போது மண்எண்ணெய் அளவை குறைத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. மாதந்தோறும் 25 காசு மண்எண்ணெய் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் தற்போது அளவு வெகுவாக குறைக்கப்பட்டு காலப்போக்கில் இல்லை என்கிற முடிவுக்கு வர அரசு ஆயத்தமாகியுள்ளது மிகக் கவலைக்குரியதாகும்.

ஏழை, எளிய குடும்பங்கள் மண்எண்ணெய்யைத் தான் நம்பி உள்ளனர். மின் விளக்கு வசதி, சிலிண்டர் வசதி இல்லாத லட்சக்கணக்கான குடும்பங்களில் எரியும், சிமினி விளக்கையும், அனைத்து விடுவது என்ற முடிவுக்கு வராமல், அவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் மண்எண்ணெய்யின் அளவை குறைக்காமல் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.
Tags:    

Similar News