செய்திகள்

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் இளம்பெண் பலி: உறவினர்கள் மறியல்

Published On 2017-12-11 08:04 GMT   |   Update On 2017-12-11 08:04 GMT
திருவள்ளூர் அருகே அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் இளம்பெண் பலியான சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை:

திருவள்ளூரை அடுத்த மாம்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி சிவசங்கர் (வயது 25). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சிவசங்கரியை பிரசவத்திற்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

சிகிச்சையின் போது சிவசங்கரிக்கு ஏற்பட்ட ரத்த போக்கு நிற்கவில்லை. இதில் சிவசங்கரி பரிதாபமாக இறந்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இந்த நிலையில் இன்று காலை சிவசங்கரியின் உறவினர்கள் மற்றும் மாம்பாக்கம் கிராம மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாம்பாக்கம்- ஊத்துக்கோட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த 2 அரசு பஸ்கள், வாகனங்களை சிறைபிடித்தனர்.

சிவசங்கரிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பரந்தாமன், வெங்கல் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Tags:    

Similar News