செய்திகள்

தினகரனை போட்டியிட அனுமதிக்கக்கூடாது: ஐகோர்ட்டில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வழக்கு

Published On 2017-12-09 09:33 GMT   |   Update On 2017-12-09 09:33 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரனை போட்டியிட அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை:

ஐகோர்ட்டில், பட்டாபிராமை சேர்ந்த ஏ.சி.சத்திய மூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது, அ.தி.மு.க. அம்மா அணியின் சார்பில் டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க. புரட்சித்தலைவி சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் உள்பட பலர் போட்டியிட்டனர். தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, வேட்பாளர்கள் பணம் கொடுத்தனர். அதிலும், டி.டி.வி. தினகரன் தரப்பினர், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வாரி இரைத்தனர். இதற்கு ஆதாரமாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் குறித்து ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பணப்பட்டுவாடா முறைகேடு நடந்ததால், இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இந்த நிலையில், வருகிற 21ந் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலிலும், மதுசூதனன், டி.டி.வி.தினகரன், மருதுகணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை மீண்டும் போட்டியிட அனுமதித்தால், அவர்கள் மீண்டும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து, மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபடுவார்கள். இதை அனுமதித்தால், அது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விடும்.

எனவே, டி.டி.வி.தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் ஆகியோரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது. அவர்களை தகுதியிழக்கச் செய்யவேண்டும் என்று கடந்த 6ந்தேதி நான் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கவும், 3 பேரையும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தொடர்ந்துள்ள சத்தியமூர்த்தி, ஆர்.கே.நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Tags:    

Similar News